Thursday, August 18, 2022

சுதந்திர போராட்ட தியாகி VKA ஆதினமிளகி அம்பலம்


பெயர் : VKA ஆதினமிளகி அம்பலம்
ஊர் : மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் சருகுவலையப்பட்டி

தேசப்பணிகள் :

🟠1943 வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொண்டதால் மூன்று வருடம் கர்நாடக மாநில பெல்லாரி சிறை தண்டனை பெற்றவர்.

🟠மேலூரின் மற்றொரு தியாகி கக்கனின் நெருங்கிய நண்பராவர்.அவரோடு இணைந்து பல சுதந்திர போராட்டங்களை முன்னெடுத்தவர்.

🟠இவரால் சருகுவலையப்பட்டி கிராமத்திற்கு பள்ளிக்கூடம்,அஞ்சலகம் கொண்டு வரப்பட்டது.

🟠விவசாய சங்க தலைவராக பணியாற்றினார்.

🟠ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சட்ட மற்றும் வழக்கு பிரச்சினைகளுக்கு பேருதவி புரிந்தார்.


சுதந்திர போராட்ட தியாகி பாதரப்பேட்டை முத்தையா


தியாகி பாதரப்பேட்டை முத்தையா Ex MLA(முத்தரையர் சமூக முதல் சட்டமன்ற உறுப்பினர் -MLA)

இவர் இலங்கையில் பிறந்தவர் பின்னர் தன் குடும்பத்துடன் துறையூர் பாதரப்பேட்டையில் குடியேறினார்.

தேசப்பணிகள்:

🟠இளம்வயதிலே தேசப்பற்று காரணமாக காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து சுதந்திர போராட்டங்களில் ஈடுபட்டார்.

🟠இவரின் தொடர் சுதந்திர போராட்டங்களால் அடிக்கடி சிறை சென்று வந்துள்ளதால் ஆங்கிலேயர்கள் இவரை கர்நாடக பெல்லாரி சிறையில் அடைத்து ஓராண்டு கடுங்காவல்/கொடுமையான தண்டணைகளை அனுபவித்தார்.

🟠அன்றைய ஒருங்கிணைந்த திருச்சி(திருச்சி,பெரம்பலூர்,அரியலூர்,புதுக்கோட்டை &கரூர்)  மாவட்டத்தின் ஜில்லா போர்டு மெம்பராக 1954 & 1957ல்  தேர்ந்தெடுக்கப்படுகிறார். 

🟠1962 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திருச்சி  உப்பிலியாபுரம்(இன்றைய துறையூர்) தொகுதி சார்பாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

சுதந்திர போராட்ட தியாகி அய்யாசாமி அம்பலம்

இந்திய சுதந்திர போராட்ட தியாகி
அ.அய்யாச்சாமி அம்பலம்
பிறந்த ஊர் : இராமேஸ்வரம்.
தந்தை : அய்யப்பன் அம்பலம்
தாய் : முத்து பேச்சியம்மாள் 

தேசப்பணிகள் :

🟠1931 இல் கள்ளுக்கடை மறியல்,
சுபாஷ் சந்திர போஸ், நேரு இளைஞர் மன்றம் தோற்றுவித்து நடத்துதல் .

🟠1933 -இல் தனுசுகோடி #காங்கிரஸ் கமிட்டி காரிய தரிசி.

🟠ஆகஸ்ட் புரட்சியில் தனிநபர் சத்தியாகிரகம் .
இராமேஸ்வரம் இந்து தர்ம சேவா சங்கத்தை தோற்றுவித்து தலைவரானார்.

🟠தமிழ்நாடு ஆலயபாதுகாப்பு கமிட்டி செயலாளர் ,கிஜன சேவா சங்க செயலாளர் .

🟠1933 இல் கள்ளுக்கடை மறியலினால் சிறையில் ஆங்கிலேயர் அடைத்தனர் .

🟠1937 -இல் வலையர் முன்னேற்ற சங்கத்தை தொடங்கி 1952 -இல் கண்ணப்பர்குல வலையர் சங்கமாக நடக்க தொடங்கியது. இந்து தர்மசேவா சங்கத்திற்கு தலைவரானார்.

🟠தமிழ்நாடு மீனவர் சங்கம்,விசைப்படகுக்காரர்கள் சங்கம் ,கல்வி ,பொது நலத்துக்கு தலைமையேற்று சேவை செய்தார்.

🔴இராமேஸ்வரத்தில் தன்னால் தொடங்கப்பட்ட கண்ணப்பர் குல வலையர் சங்கத்தை தமிழ்நாடு முத்தரையர் சங்கத்துடன் இணைத்தார் .இவரது மிகசிறந்த சேவையால் 07.09.1980  இல் மாநில முத்தரையர் சங்கத்திற்கு பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்

தியாகி அய்யாசாமி_அம்பலம் அவர்களின் வீரத்தையும்,தியாகத்தையும் போற்றி வணங்குவோம்.

Tuesday, November 23, 2021

குலம் காத்த செம்மல் "குழ.செல்லையா"

அரசியல் வரலாற்றில் சுயேச்சையாக வெற்றிகண்ட தனித்துவ அடையாளம் கொண்டவர்.
திராவிட அரசியலில் பொருளாதார அதிகாரம் இல்லாமல் மக்கள் ஆதரவுடன் தனித்து நின்று சிங்கம் சின்னத்தில் வென்ற சுயேச்சை நாயகன்.
மக்களின் நல்வாழ்விற்காக நித்தமும் அயராது உழைத்த மாமனிதர்.
ஆண்ட வம்சத்தின் அரசியல் அதிகாரம் மீட்க போராடியவர்.
அஇஅதிமுக கட்சி துவங்கும் போது 5 வது நபராக கையெழுத்திட்டு உறுதுணையாக இருந்தவர்‌.
MGR அவர்களாலும், அரசியல் வட்டாரத்தில் பிறராலும் தொகுதி சிங்கம், அம்பலத்தான், சொல்லரசு செல்லையா என்று மதிப்புடன் போற்றப்பட்டவர்.
மக்களின் நலன்காத்த மைந்தன் தனது கடைசி காலத்தில் ஏழ்மையான நிலையிலே உயிர்நீத்த உத்தம அரசியல் ஆசான.

அய்யாவின் வாழ்க்கை  நினைவுகள் :

ஒரு மனிதனின் மரணத்தில் தெரியும் என்பார்கள் அவன் வாழ்ந்த வாழ்க்கைக்கான அர்த்தம், ஆயிரமாயிரமாய் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியவர்களை காணும்போது அப்படி ஒரு நல்வாழ்க்கையை சொல்லரசுவும் வாழ்ந்திருப்பதை உறுதிபடுத்தியது.

1971 இன்றுபோல எந்த தொழில்நுட்ப வசதியும் இல்லாத காலகட்டம், பொது போக்குவரத்தும் பெரிய அளவில் இல்லாத காலம், அந்த காலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தின் எல்லையில் துவங்கி தஞ்சை மாவட்டத்தின் கடற்கரை மற்றும் உள்பகுதி முழுவதும் பரவி இருந்த பெரிய தொகுதியான பேராவூரணி தொகுதி உட்பட தமிழ்நாடு முழுவதும் சட்டமன்ற தேர்தல்...

35 வயதே நிரம்பிய இளைஞன் ஒருவன் திமுகவின் தீவிர தொண்டன், ஆர்வத்தோடு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்கிறான் கட்சியில், கடைந்தெடுத்த அயோக்கியர்களின் கூடாரத்தில் இள வயதுகாரனுக்கு, அதுவும் ஒரு அறியப்படாத, அரசியல் அரிசுவடி அறியாத சாதியில் பிறந்தவனுக்கு சீட்டா...? என்று எள்ளிநகையாடி வாய்ப்பு மறுத்து வேட்பாளராக அறிவிக்கிறது திமுக. வெகுண்டெழுந்த அந்த இளைஞன் அப்போதே தீர்மானிக்கிறான் "தான் தான் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர்" என்று.

சுயேட்சையாக களம் காண தீர்மானித்தாகிவிட்டது, அதிர்ஷ்டமான முத்தரையர்களின் அடையாளம் "சிங்கம்" சின்னமும் கிடைக்கிறது.

 (இதுதான் முத்தரையர் சமுதாய விடிவெள்ளி திரு. வேட்டையன் மூப்பனார் போராடிய சிங்கம் சின்னம் முத்தரையர் சின்னமாக மாறிய தருணம்....)

 ஓய்வில்லாமல் ஒவ்வொரு கிராமமாக சுற்றி அவ்வளவு பெரிய தொகுதி முழுவதும் சுற்றி எல்லா மக்களையும் நேரில் சந்தித்து ( வேறு வழியே இல்லை நேரில் மட்டுமே சந்திக்க முடியும்) தன்னுடைய கணீர் குரலெடுத்து பேசி வாக்கு கேட்க, அறியாமையும், படிப்பறிவும் இல்லாத மக்களுக்குள் அந்த பேச்சுக்கள் ஏதோ தீப்பொறியை பற்றவைக்க 2020 வாக்குகள் வித்தியாசத்தில் "பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர்" ஆக தேர்வாகிறார் திரு.மிகு. சொல்லரசு குழ.செல்லையா...!

இருந்தாலும் தனக்கு வாய்ப்பு மறுத்த கட்சிக்கு பாடம் புகட்ட மறக்கவில்லை இந்த மன்னர் குல மாணிக்கம்...

 திமுகவுக்குள் உட்கட்சி குழப்பம் ஒன்று வருகிறது திமுக பொருளாளர் எம்.ஜி.ஆர் கட்சியின் தலைவர்கள் அனைவரும் தங்கள் சொத்துகணக்கை காட்ட சொல்கிறார், சொத்துக்கணக்கை காட்டுவதென்றாலே அன்றைய முதல்வர் கருணாநிதிக்கு அலர்சியாகிறது, பூசல் முற்றி எம்.ஜி.ஆர் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார்.

புதிதாக அண்ணாவின் நாமம் தாங்கி "அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை" தோற்றுவிக்கிறார் எம்.ஜி.ஆர் அவரோடு (அவரையும் சேர்த்து) 4 சட்டமன்ற உறுப்பினர்கள் திமுகவில் இருந்து வெளியேறுகிறார்கள், எம்.ஜி.ஆர் குழ.செல்லையாவையும் கட்சிக்கு அழைக்கிறார் நேராக கட்சிக்குள் சென்றிருக்க முடியும். ஆனால் அப்படி செய்யாமல் ஒரு காரியம் செய்கிறார், திமுகவோடு பேச்சுவார்த்தை நடத்துகிறார் "உங்கள் கட்சிக்கு திருப்பி வருகிறேன் என்று" உட்கட்சி குழப்பம் மிகுந்த அந்த நேரத்தில் ஒரு சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் கட்சிக்கு வருவது நல்லதுதான் என்று அரசியல் சாணக்கியர் கலைஞர் கருதுகிறார், சரியென சம்மதிக்கிறார், இவரும் கட்சியில் இணைகிறார். அடுத்த நாளே "திமுக சட்டமன்ற உறுப்பினர் அதிமுகவில் இணைந்தார்" என நாளேடுகள் செய்தி வெளியிட அரசியல் சாணக்கியர் முகத்தில் ஈ ஆடவில்லை, அதனால்தான் எம்.ஜி.ஆர் குழ.செல்லையாவை "எல்லாருக்கும் தலையில மூளை, செல்லையாவுக்கு மட்டும் உடம்பெல்லாம் மூளை" என்று. அப்படி மூளையோடு இருப்பவனை யார்தான் சீராட்டி பாராட்டி வைத்துக்கொள்வார்கள் ? அதனால்தான் அரசியல் அரங்கில் அவரால் கோலச்ச முடியவில்லை...

அவரோடு அதிமுகவின் முதல் படிவத்தில் கையெழுத்து போட்ட 12 பேரில் எம்.ஜி.ஆருக்கும் குழ.செல்லையாவுக்கும்தான் கல்வி நிறுவனங்கள் கிடையாது என்பதுதான் குழ.செல்லையாவின் சம்பாத்தியம்.

1906 ஆம் ஆண்டு முத்துராஜா மஹாசன சங்கம் தொடங்கி இருந்தாலும், சில மாநாடுகள் பல இடங்களிலும் நடத்தி இருந்தாலும், தமிழகமே அதிரும் வண்ணம் ஒரு பிரமாண்டமான #முத்தரையர் மாநாட்டை நடத்தி அதில் அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரை மேடையில் ஏற்றி "முத்தரையர்களுக்கு" இன்றுவரை தொடரும் அமைச்சரவை பங்களிப்பை உறுதி செய்த பெருமையும் திரு.குழ.செல்லையாவையே சேரும்...


எம்.ஜி.ஆர் அதிமுக தொண்டர்களை முட்டாள்களாக வைத்திருக்க எண்ணி தனது கட்சி தொண்டர்கள் அனைவரும் கட்சியின் சின்னத்தை கையில் பச்சை குத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கிறார், இயல்பிலேயே சுயமரியாதை கொண்டவர் இதனை எதிர்த்து கட்சியில் இருந்து வெளியேறுகிறார். பின்னர் "தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தில்" தலைவராக சிறிதுகாலம் பணியாற்றுகிறார்...

2001 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அன்றைய ஆளும்கட்சியான திமுக ஒரு கூட்டணி அமைக்கிறது, தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக ஒரு சாதிசங்கம் கூட்டணியில் இடம்பெருகிறது, அதற்கு முன்புவரை தேர்தல் கூட்டணி என்றாலே அது அரசியல் கட்சிகளுக்குள் மட்டுமே தொகுதி பங்கீடாக இருக்கும் அன்றைக்கு திமுக அமைத்த கூட்டணியில் #முத்தரையர்களின் அரசியல் கட்சியாக இருந்த கு.ப.கிருஷ்ணனின் "தமிழர்பூமியும்" குழ.செல்லையாவின் "தமிழ்நாடு முத்தரையர் சங்கமும்" அங்கம் வகிக்கிறது.

அந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம்வகித்த தமாகாவின் திருஞானசம்பத்தம் (முத்தரையர்) எதிர் வேட்பாளர் அவரிடம் 28659 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைகிறார்.

தொடர்ச்சியாக அரசியலில் பயணப்பட்டாலும் பெரிதாக எதையும் அவருக்காகவோ ,அவர் சார்ந்த சாதிக்காகவோ சாதித்துவிட முடியவில்லை அதே நேரம் அவரை தவிர்த்துவிட்டு முத்தரையர் வரலாற்றை எழுதிவிடவும் முடியாது.

எண்ணற்ற வரிகளில் போற்றிப்பாட வேண்டிய அய்யாவின் வாழ்க்கை சரிதை என்பது ஓர் வரியில் சொல்லுகையில்,

அய்யா சொல்லரசு அவர்கள் *உத்தம மக்கள் தலைவர்*

அரசியல் அதிகாரத்தில் பொருளாதாரத்தில் உயரும் அரசியல் தலைவர்கள் மத்தியில்,
மக்களின் நலன் காத்திட அயராது உழைத்து "உத்தம தலைவனாக மக்கள் மனதில் உயர்ந்த மாமனிதர்". 

ஐயா #குழ_செல்லையா நவம்பர் 23.11.2017 அன்று இயற்கை எய்தினர்.

" சிங்கம் சின்னத்தில் சுயேச்சையாக வெற்றிகண்ட" சரித்திர நாயகனின்  அவரின் நினைவுநாளில் நினைவுகூர்ந்து போற்றுவோம்...

சொல்லரசு அய்யாவின் பெருமைகளை நாளைய தலைமுறைக்கு வழிகாட்டலுடன் போற்றிடச் செய்வோம்...

Thursday, May 27, 2021

தமிழக அமைச்சரவையில் முத்தரையர் சமூகத்தின் முதல் பிரதிநிதி.. M.R.கோவேந்தன்

தமிழக அமைச்சரவையில் முத்தரையர் சமூகத்தின் முதல் பிரதிநிதி முன்னாள் பேராவூரணி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தெய்வத்திரு ஐயா M.R.கோவேந்தன் அவர்கள்..

பேராவூரணிக்கு அருகில் உள்ள முடச்சிக்காடு என்னும் கிராமத்தில் மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்.
சிறுவயதில் வாட்டிய வறுமையை போக்க பேராவூரணி பகுதியில் நாளிதழ் விநியோகம் செய்வதில் வாழ்வை தொடங்கி அமைச்சர் என்ற இடம் வரை உயர்ந்தவர்.
சிறுவயதில் தன்னுடைய அரசியல் செயல்பாட்டினால் பேரறிஞர் அண்ணா அவர்களின் பாராட்டைப் பெற்றவர்.
ஊராட்சி மன்ற உறுப்பினர்,
ஊராட்சி மன்ற தலைவர்,
ஒன்றிய பெருந்தலைவர்,
சட்ட மன்ற உறுப்பினர்,
அமைச்சர் 
என்று தனது விடா முயற்சியாலும், கடின உழைப்பாலும் வெற்றிகளை குவித்தவர்.
பேராவூரணியில் மூன்று முறை தொடர்ந்து வென்று புரட்சித் தலைவர் M.G.R.அவர்களின் அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாற்றும் மீன் வளத்துறை என்று இரு துறைகளுக்கு அமைச்சராக இருந்து திறம்பட பணியாற்றியவர்.
ஐயா கோவேந்தன் அவர்கள்தான் பேராவூரணியை கட்டமைத்த பிதாமகன்.
வாடகை கட்டிடத்தில் இயங்கிய பேராவூரணி தாலுகா அலுவலகத்திற்கு புதிய பிரமாண்ட கட்டிடம் கட்டி திறந்து வைத்தார். 
அரசு மருத்துவமனையை நவீனப்படுத்தி மகப்பேறு பிரிவையும்,எக்ஸ்ரே கருவிகளையும் கொண்டு வந்தார்.
பேராவூரணியில் புதிய போக்குவரத்து பணிமனையை கொண்டுவந்தார்.பல்வேறு எதிர்ப்புகளுக்கு முகம்கொடுத்து பல ஊர்களுக்கு புதிய வழித்தடங்களை ஏற்படுத்தி புதிய பேருந்துகளை இயக்க வழிவகை செய்தார்.
பேராவூரணியில் புதிதாக தீயணைப்பு நிலையத்தை நிறுவினார்.
கால்நடை மருத்துவமனைகளை கொண்டுவந்தார்.
பேராவூரணி தொகுதியில் பல கிராமங்களை இணைக்கின்ற வாட்டாத்திக்கொள்ளைக்காடு காட்டாற்றுபாலம் கட்டினார்.கட்டயங்கங்காடு பாலம்  கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.
பேராவூரணியில் பல துவக்கப்பள்ளிகளை நடுநிலை பள்ளிகளாகவும்,
பெருமகளூர் உள்ளிட்ட பல உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி பல புதிய பள்ளி கட்டிடங்களை 
கட்டினார்.
மாணவர்கர்களுக்கு தங்கும் விடுதியையும் காட்டினார் அவைகள் இன்றும் உள்ளன.
பேராவூரணி தொகுதியில் எழுபதுபேருக்கு கிராம நிர்வாக அலுவலர் வேலை.
நூற்றி ஐம்பது பேருக்கு தலையாரி வேலை.
இருநூருக்கு மேற்பட்டோருக்கு சத்துணவு அமைப்பாளர் பணி.பலருக்கு சமையலர் பணி என்று எவரிடத்திலும் ஒரு ரூபாய் பெறாமல் வேலை கிடைக்க வழிவகை செய்தார்.
தான் பதவியில் இருந்த காலத்தில் பேராவூரணி பகுதியில் பலருக்கு அரசுவேலை பெற்றுத்தந்தார்.
M.G.R.அவர்கள் தாத்தா மீது மிகுந்த அன்பு கொண்டவர். ஏனென்றால் ஐயா கோவேந்தன் நேர்மையானர் உறுதியானவர் என்பதால்.
அதனால்தான் சென்னையிலிருந்து சாதாரண குக்கிராமமான முடச்சிக்காட்டிற்கு தனது இல்ல திருமணத்திற்கு பத்து அமைச்சர்கள், பல சட்டமன்ற உறுப்பினர்கள் புடைசூழ வந்திருந்து  பெருமை சேர்த்தார் M.G.R.
அந்த மணவிழா மேடையில் M.G.R.பேசும்போது கோவேந்தன் உறுதியான கொள்கையாளன் என்று புகழாரம் சூட்டினார்.
விடாப் பிடியான செயல்பாடு.சமரசமற்ற அரசியல் சண்டைகள்.உறுதியான பேச்சு.சொன்ன சொல் மாறாத குணம்,எவருக்கும் அஞ்சாமல் மணதில் பட்டதை பேசும் துணிவு இவை அனைத்தையும்
தாத்தாவின் அரசியல் எதிரிகளும் வியந்து பார்த்தார்கள்.அதனால்தான் தாத்தாவை கொள்கை வேந்தன் கோவேந்தன் என கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
பேராவூரணி பகுதியில் அரசியல் அதிகாரமற்று கிடந்தவர்களை ஊராட்சி மன்ற தலைவர்,ஒன்றிய பெருந்தலைவர்,தனது கட்சியில் ஒன்றியச் செயலாளர், நகரச்செயலாளர் என்று வெல்லவைத்து அழகு பார்த்தவர்.
சாதிகடந்து அனைத்து சமூக மக்களையும் நேசித்த சமூகநீதி போராளி.
இப்படி எத்தனையோ உண்டு அவரின் சரித்திரத்தில்.
இன்றும் பேராவூரணி மக்கள் M.R.G.இருந்தால் இப்படி நடக்குமா என்று ஆதங்கப்படுவதை கானமுடிகிறது.
தனக்கென்று வாழாமல் மக்களுக்காக வாழ்ந்த மாபெரும் தலைவர் ஐயா கோவேந்தன்.
அய்யா கக்கன் வரிசையில் வைத்து வணங்கப்பட வேண்டிய தலைவர் ஐயா கோவேந்தன்.
#MRகோவேந்தன் #பேராவூரணி

Monday, November 2, 2020

தனுஷ்கோடியின் அடையாளம் - நீச்சல் காளி அம்பலம்


தனுஷ்கோடி நீச்சல்காளி அம்பலம் (NeechalKali Ambalam)

            சுனாமி பேரழிவிற்கு முன்பு தமிழகத்தில் கொடூர பேரழிவு ஒன்று நடந்தேறியது. அந்த மாபெரும் பேரழிவில் ஓர் நகரமே கடலுக்கும் மூழ்கியது. அச்சம்பவம் இன்றும் அழியா சோகமாக அனைவரது மனதிலும் உள்ளது. வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் சீற்றத்தால் 55 ஆண்டுகளுக்கு முன்பு 1964-ஆம் ஆண்டு டிசம்பர் 23க்கும் 24-க்கும் இடைப்பட்ட நள்ளிரவில் ஏற்பட்ட மிகப்பெரிய கடல் சீற்றத்தில் ராமேஸ்வரத்தை அடுத்து தனுஷ்கோடி நகரமே அழிந்தது.

இந்தியாவின் தென்கோடி  வரலாற்றிலும், பிரிட்டிஷ் காலத்திலும் வணிக மையமாக விளங்கிய துறைமுக நகரமே தனுஷ்கோடி. 1964 டிசம்பர் 23 ஆம் தேதி வங்கக்கடலில் உருவான கோரப்புயல் நள்ளிரவு 12.30 க்கு ஆழ்ந்த உறக்கத்திலிருந்த பல்லாயிரக் கணக்கானோர் உயிரை பறித்தது. மறுநாள் அதிகாலை வரை நீடித்த 120 கி.மீ. வேகத்தில் வீசிய புயலால் கடல்நீர் பெரும் அலைகளாக ஊருக்குள் புகுந்து தனுஷ்கோடியை அடியோடு அழித்தது.

பாம்பன் பாலம் தனுஷ்கோடி நகரத்துடன் இணைத்திருந்த காலத்தில் சென்னையில் இருந்து தனுஷ்கோடிக்கு ரயிலில் சுற்றுலா வந்த கல்லூரி மாணவ, மாணவிகள் உட்பட பயணிகள் அனைவரும் ரயில் பெட்டிகளில் சிக்கி உருத்தெரியாமல் அழிந்தனர். கடலோரத்தில் இருந்த ஆயிரக்கணக்கான மீனவர்களின் குடும்ப வாழ்விடமும் அழிந்து போயின.

கிருஸ்தவ தேவாலயம்

கோயில்களிலும், கட்டடங்களிலும், ரயில்நிலையத்திலும், எஞ்சியவர்களை நீச்சல்காளி அம்பலம் அவர்களின் சீறிய முயற்ச்சியால் பலர் காப்பாற்றப்பட்டனர். அவருடன் சில வலையர் - மீனவர்களும் நாட்டுப் படகில் பலரை மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றனர். உயிரிழந்த பலரது உடல்களையும் நீச்சல்காளி நீண்டநேரம் போராடி மீட்டார்.

தனுஷ்கோடி நகரம் அழிந்த பின்னும் அங்கு வரும் மக்களிடம் அந்நகரின் வரலாற்றை எடுத்துக்கூறி  தனுஷ்கோடியை வாழவைத்தார் நீச்சல் காளி என்கிற காளி அம்பலம்.

இரயில் நிலையம்

அஞ்சல் அலுவலகம் -1955

தனுஷ்கோடியின் மைந்தன் "நீச்சல் காளி அம்பலம்".



                    இந்தியாவின் தென்பகுதி எல்லை முடிவில் தனுஷ்கோடியில் பிறந்தவர் நீச்சல் காளி அம்பலம் அவர்கள். இவர் முன்னை தமிழருள் மூத்தவர்கள் என்றழைக்கப்படும் வலையர் எனும் மீனவர்குடியில் பிறந்தவர். வலையர்கள் என்பார் அரசகுடியும், மீனவருமான முத்தரையர் சமூகத்தினர் ஆவர். கடல் தேவதையின் கருணையைப் பெற்றவர் இந்த காளி அம்பலம். இவர் இளம் வயதிலேயே நீச்சலில் அதீத திறமை வாய்ந்தவராக திகழ்ந்தவர்.  இந்த காளியின் கடலாட்சி, தமிழகத்தின் தென் கிழக்குக் கோடியில் உள்ள தனுஷ்கோடியில் மிக பிரசித்தமானது. மீனவரான காளி அம்பலம் அவர்கள், 60 மற்றும் 70-களில் தனுஷ்கோடி முதல் இலங்கை வரை நான்கு முறை பாக் ஜலசந்தி வழியாக கடலை நீந்திக் கடந்து சாதனைபடைத்தவர்.

"நீச்சல் காளி அம்பலம், 1968-ல் ஒருமுறை பாக் ஜலசந்தியை நீந்திக் கடக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். ராமேஸ்வரம் நகரியம் சார்பில் இந்தபோட்டி நடத்தப்பட்டது.

நீச்சல் காளி தனுஷ்கோடியிலிருந்து ஸ்ரீலங்காவின் (இலங்கை) தலைமன்னார் வரை – 40 கி.மீ தூரம் – வெகு அனாயாசமாக நீந்திக்கடந்துக்கொண்டிருந்தவர் அவர்.   தனுஷ்கோடியில் குதித்து, 12 இலிருந்து 14 மணி நேரம் இடைவிடாமல் நீந்தி தலைமன்னார் சேர்ந்து, அங்கு இரண்டு மூன்று நாட்கள் இருந்துவிட்டு, மறுபடியும் நீந்தி தனுஷ்கோடி வந்து சேருவாராம். இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. சமீபத்தில் கூட ப்யூலா செளத்ரி என்ற நீச்சல் வீராங்கனை தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னார் வரை நீந்தியிருக்கின்றார். ஜிப்ரால்டர்  ஜலசந்தியைக் கூட நீந்திக் கடந்தவர் இந்த ப்யூலா. 

ஆனால் இதுபோன்ற நீச்சல் வீரர்களுக்கும், நீச்சல் காளிக்கும் முக்கியமான ஒரு வித்தியாசம் உள்ளது. நீச்சல் வீரர்களோடு கூடவே பாதுகாப்புக்காக விசைப்படகுகளில் ஆட்கள் செல்வார்கள். மின்விளக்கு வசதி, வழிகாட்டுவதற்கு ‘கைட்’ போன்ற எல்லா வசதியும் உண்டும். அதோடு, தண்ணீரிலேயே நீண்டநேரம் இருப்பதால் உடம்பில் சுளுக்கு, பிடிப்பு எதுவும் ஏற்பட்டுவிடாமல் இருக்க உடம்பு பூராவும் ‘க்ரீம்’ தடவிக்கொள்வார்கள் நீச்சல் வீரர்கள். 

இது எல்லாவற்றையும் விட அவர்களுக்குள்ள அதிமுக்கிய வசதி என்னவென்றால், நீந்தமுடியவில்லையென்றால் நீச்சலை ரத்து செய்துவிட்டு படகில் ஏறி அமரலாம். ஆனால் நீச்சல் காளிக்கு இதுபோன்ற வசதிகள் ஏதும் கிடையாது. களைப்பு ஏற்பட்டாலும் நீச்சலை நிறுத்த முடியாது, நிறுத்தினால் மரணம். மூச்சைப் பிடித்துக்கொண்டு தலைமன்னார் வரை நீந்தியே ஆக வேண்டும். இவற்றையெல்லாம் சிறிதும்  பொருட்படுத்தாது ஒற்றை ஆளாக 40 கி.மீ கடல் தூரத்தை 14 மணி நேரம் தொடர்ச்சியாக நீந்தி சாதனை படைத்தவர். தனது 80 வயதிலும் முதுமை எண்ணாது ஆழ்கடலில் பாய்ந்து நீந்தக்கூடிய நெஞ்சுரம் கொண்டவர்.  இதனால் அப்பகுதிகளில் தனித்தோர் மரியாதையுடன் நீச்சல்காளி அழியா புகழ்ப்பெற்றார்.


        நீச்சல்காளி அம்பலத்திற்கு இளம் வயதிலேயே பெருமைமிகு அடையாளம் கிடைக்கப்பெற்றது. 1964-ல் ஏற்பட்ட புயலில் கடலுக்குள் சிக்கிய தனுஷ்கோடி நகரத்தின் மக்களை மீட்டு நீச்சல் காளி' மட்டும் தனியொரு ஆளாக பல உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறார். தனது நீச்சல் திறனை பெரிதும் பல உயிர்களை காப்பாற்ற பயன்படுத்தினார். தன்னுயிரையும் பொருட்படுத்தாது வெகுநேரம் கடலில் நீந்தியும், உடல் அயர்வு பாராமலும் மக்கள் பலரை காப்பாற்றியது நீச்சல் காளியின் தனி போற்றுதலுக்கு உரியது.

அந்த கடல்சீற்றத்திற்கு பிறகு அங்குவாழ்ந்த மக்கள் அனைவரும் இராமேஸ்வரம் மற்றும் பிற பகுதிகளில் குடிஅமர்த்தப்பட்டனர். ஆனால் அந்நகரில் மிகுந்த செல்வந்தர்களாய் வாழ்ந்த முத்தரையர் சமூக வலையர்கள் தமது வீடுகள் மற்றும் அடிமட்ட வாழ்வாதாரத்தினை இழந்தும் தனுஷ்கோடியை விட்டு வராமலே சிலர் அங்கேயே தங்கியுள்ளர். இன்றும் அம்மக்களின் குடிசைகளும், நீச்கல்காளி அம்பலத்தின் குடும்பத்தினரும் அப்பகுதியில் உள்ளதை சுற்றுலா செல்லும் பயணிகள் அந்த அவலநிலைகளை பார்க்க முடியும்.

தற்போது அப்பகுதியில் இடிந்து போன, சேதமடைந்த சில கட்டிடங்கள் மட்டுமே புயலின் மிச்சங்களாய் தற்போது இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சோகத்தை நினைவூட்டி வருகின்றன.  தனுஷ்கோடி நகரம் அழிந்தபின்பும் நீச்சல் காளி அவர்கள் நான் பிறந்து வளர்ந்த இடம், இந்த இடத்தைவிட்டு நான் வரமாட்டேன். என் கடைசி காலம் வரை இங்கேயே இருப்பேன், இன்னும் எத்தனைப் புயல் வந்தாலும் சந்திப்பேன் என்ற வைராக்கியத்துடன் முதன் முதலில் அங்கேயே தங்கி அந்நகரின் நீங்கா நினைவிலே வாழ்ந்து வந்தார்.  அங்கு வரும் வரவேற்க்கும் முதல் ஆளாக நின்று மக்களிடம் தனுஷ்கோடியின் வரலாறும், அழிவையும் எடுத்துரைத்து மக்களின் மனதில் தனுஷ்கோடி நகரத்தை அழியாது வாழவைத்தார். அதன்பிறகு அவரது குடும்பத்தினரும் அவருடனே அப்பகுதியில் வாழத்தொடங்கினர். 

தனுஷ்கோடி நகரம் தான் இழந்த பெருமையை மீண்டும் பெறும் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து வந்த நீச்சல்காளியின் விருப்பம் கடைசிவரை நிறைவேறவில்லை. அந்த கடல் விழுங்கிய தனுஷ்கோடியின் கடைசி சாட்சியாய் நின்ற நீச்சல்காளியும் தன் மனதில் பதிந்த நீங்கா துயரத்திலேயே உயிர்நீத்தார்.

தனக்கென்ற தனி வரலாறு கொண்ட "மனிதகுல மாணிக்கம் நீச்சல் காளி அம்பலம்" அவர்கள் 2010 ஆம் வருடம் நவம்பர் 03 அன்று இறைவனடி சேர்ந்தார்.

இன்றுவரை யார் இந்த நீச்சல் காளி என்பதும், கிருஸ்தவ ஆலயம், இந்து கோயில்களும் நிறைந்த பெருவணிக நகரமாகவும், அக்காலத்திலேயே பிரமாண்ட அஞ்சல் அலுவலக கட்டிடமும், இரயில்வே நிலையமும் கொண்டிருந்த புனித பூமியான தனுஷ்கோடி நகரினை பற்றியும் பெரியளவில் கூறப்படவில்லை.

"நீச்சல் காளி அம்பலம்" தனுஷ்கோடியின் அடையாளம் ஆவார்.

♦ பெரும்நகரமாக இருந்து அழிந்துள்ள தனுஷ்கோடியின் எல்லை பகுதியில் நினைவு சின்னங்களும், பல உயிர்களை கடலில் நீந்தியே காப்பாற்றிய நீச்சல்காளி அம்பலத்திற்கு திருஉருவ சிலை மற்றும் மண்டபம் அமைத்திட வேண்டும்.

இது அப்பகுதி மக்கள் மட்டுமின்றி அனைவரது நீண்டநாள் வேண்டுகோள்களாகவே உள்ளது. மத்திய, மாநில அரசுகளும் சமூக ஆர்வலர்களும் நினைத்தால் நிச்சயம் இது சாத்தியமாகும்.

(நீச்சல் காளியின் விருப்பமும்-ஏக்கமும் தனுஷ்கோடி நகரம் மீண்டும் மக்களின் வாழ்வு நகரமாக மாற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது).

வாழ்க "நீச்சல் காளியின் புகழ்".........




Thursday, July 9, 2020

சருகுமான் (சருகுவலையர்) - வலையர்களின் இயற்கை அறிவியல் மரபு அறிவு


புள்ளி எலிமான்' என்றொரு உயிரினம் பற்றிச் சமீபத்தில் பல செய்திகள் வெளிவந்தன. இந்தப் பெயருடன் ஓர் உயிரினம், நம் பகுதிகளில் இருக்கிறதா என்ற ஆச்சரியம் ஏற்பட்டது. தேடிப் பார்த்ததில், ஆங்கிலத்தில் ஸ்பாட்டட் மவுஸ்டீர் என்று அழைக்கப்படுவதால், ‘புள்ளி எலிமான்‘ என அப்படியே மொழிபெயர்த்துவிட்டார்கள்.

சங்கக் கால உயிரினங்கள் பற்றி பல நூல்களை எழுதியுள்ள பி.எல்.சாமி, தன்னுடைய கட்டுரை ஒன்றில் இந்த உயிரினத்தைப் புள்ளி எலிமான் எனக் குறிப்பிட்டுள்ளார். என்றாலும், அது பழைய பதிவு. நம் மரபையே அறியாமல், ஆங்கிலத்தில் உள்ளதை அர்த்தம் புரியாமல் மொழிபெயர்ப்பதால் ஏற்படும் பிரச்சினை இதுவென்று, சூழலியல் அறிஞர் சு. தியடோர் பாஸ்கரன் உள்ளிட்டோர் தொடர்ந்து சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

சருகு மான்

இந்த உயிரினத்தின் தமிழ்ப் பெயர் ‘சருகு' மான் என்னும் சொல், தமிழில் இரட்டைக்குளம்பிகளுக்கான பொதுச்சொல்; அதனால் இந்த உயிரினம் மக்கள் வழக்கில் சருகுமான் எனப்பட்டது. இலைச்சருகுகள் இடையே மறைந்து வாழும் தன்மையைக் கொண்டிருப்பதால், இதற்குச் சருகு என்னும் பெயர் ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது.

இக்கருத்து ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இருந்தாலும் உயிரினங்களுக்குக் காரணப் பெயரைச் சூட்டுவது தமிழ் மரபன்று; ஒன்றிலிருந்து பிரிந்து, இயல்புநிலை திரிந்து பொய்யாக உள்ளவற்றைத்தான் ‘சருகு' என்று அழைப்பது தமிழ் சொல் மரபு (இலைச்சருகு, வெங்காயச்சருகு என்பதைப் போல). மெல்லியதான, ஒடியக்கூடிய தன்மையைச் சுட்டவும் சருகு என்ற சொல் பயன்பட்டிருக்கிறது.

மாயம் காட்டும்

அதேநேரம் இந்த உயிரினம் இரட்டைக்குளம்புகளுடன் பார்க்க மான்களைப் போலிருந்தாலும், இந்த உயிரினம் மான் வகையைச் சேர்ந்தது அல்ல; இரட்டைக்குளம்பிகளான இயங்குதிணை உயிரினத்திலிருந்து பிரிந்து, திரிந்துபோய்ச் சரியாகப் பரிணாமவியல் மாற்றம் அடையாத உயிரினம் இது. எனவே தோற்றத்தில் மானைப் போலிருந்தாலும், உயிரின வகைப்படி இது மான் அல்ல. மானைப் போன்ற சருகு என்பதால், சருகுமான் எனப்பட்டது.

இந்தப் பொய்யான தன்மையும் காய்ந்த இலைதழைகளினூடே தன்னுருவை மறைத்து மாயம் காட்டித் திரிவதாலும் இதற்குப் பொய்மான், மாயமான் என்னும் பெயர்களும் உண்டு. சருகு என்னும் இடுகுறிப் பெயரின் தன்மையைப் புரிந்துகொள்வதில் ஏற்பட்ட சிக்கலால், பொய்மான் என்னும் காரணப்பெயராக மாற்றவேண்டிய அவசியம் தமிழ் மரபில் ஏற்பட்டிருக்கிறது. இலக்கியத்தில் சருகுமான் பொய்மானாயிற்று. மாரீசன் பொய்மானாக வேடமெடுத்து ஓடினான் என்றால், சருகுமானாக வேடமெடுத்து ஓடினான் என்பதுதான் பொருள். பொய்யான மான் என்று பொருள் காண்பது, பொருள்மயக்கம். கல்கி எழுதிய ‘பொய்மான் கரடு' என்னும் புதினம் நினைவுக்கு வரலாம்.

மறைந்த இயற்கை அறிவு

கடந்த ஓரிரு ஆண்டு கால நாளிதழ்களைப் புரட்டினால் திண்டுக்கல், வில்லிப்புத்தூர், கடையநல்லூர், களக்காடு, தர்மபுரி, நீலகிரி ஆகிய ஊர்ப்புறங்களில் சருகுமான்கள் வேட்டையாடப்பட்ட செய்திகள் வந்துள்ளன. திண்டுக்கல், நத்தம், சிறுமலைப் பகுதிகளில் இந்தச் சருகுமான்கள் இப்போதும் வேட்டையாடப்பட்டுவருகின்றன. சருகுமான்கள் வாழ்வதற்கேற்ற மலைகளும் கரடுகளும் இப்பகுதிகளில் இருப்பதால், இங்கு அவை அதிகமாக இருந்திருக்கலாம். ஏனென்றால், இப்பகுதியில் வசிக்கும் வேட்டுவச் சமூகமான வலையர் சாதியில், சருகுவலையர் என்னும் பெரும்பிரிவு உண்டு.

இந்த வேட்டுவச் சமூகத்தினர் சருகுமான்களைக் குலச்சின்னமாக வைத்திருந்ததால் சருகுவலையர் எனப்பட்டனர்; இதுபோன்ற குலச்சின்ன மரபு எல்லாச் சமூகங்களில் உண்டு. ஆனால், பிற்காலத்தில் மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்புகள் அற்றுப்போன நிலையில், சருகுமான்களைப் பற்றிய அறிவை மதுரை, திண்டுக்கல் மாவட்ட மக்கள் முற்றிலும் இழந்துவிட்டனர். அப்போது, சருகுமான்களின் தோற்றத்தை வைத்து அவற்றைக் காட்டு எலிகள் எனக் கருதி, சருகுவலையர்களை எலிகளோடு தொடர்புபடுத்தினர். அதேநேரத்தில் தங்கள் வயல்களைப் பாழ்படுத்தும் எலிகளைப் பிடிக்க மட்டும், சருகுவலையர்களின் மரபுஅறிவைப் பயன்படுத்திக் கொண்டனர்.

இயற்கை பற்றிய அறிவைப் பெரும்பான்மை மக்கள் இழந்து வருவதன் அடையாளமே மேற் கண்டது போன்ற பெயர் குழப்பங்கள், வகைக் குழப்பங்கள். இயற்கை பற்றிய மரபு அறிவைப் பாதுகாக்க சருகுமான் போன்ற பெயர்களையும், அந்த உயிரினங்களையும், சருகுவலையர்களின் அறிவையும் ஒருங்கிணைந்து பாதுகாக்க வேண்டும்.

கட்டுரையாளர், தமிழ் ஆராய்ச்சியாளர் தொடர்புக்கு: Writerchiththaanai@gmail.com

சுதந்திர போராட்ட தியாகி VKA ஆதினமிளகி அம்பலம்

பெயர் : VKA ஆதினமிளகி அம்பலம் ஊர் : மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் சருகுவலையப்பட்டி தேசப்பணிகள் : 🟠1943 வெள்ளையனே வெளியேறு போராட்...